×

கொரோனா தொற்றின் 2-வது அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது: மருத்துவர்களுடனான ஆலோசனையில் கண் கலங்கிய பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா தொற்றின் 2-வது அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என்று கண் கலங்கியபடி பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா 2வது அலை பாதிப்பு இந்தியாவில் சற்று சரியத் தொடங்கி உள்ளது. பாதிப்பு குறைந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. பாதிப்பு வெகு அதிகமாக இருந்த மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில்  தற்போது வைரஸ் தொற்று குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் கொரோனா 2-வது அலை தொடர்பாக வாரணாசியில் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்றின் 2-வது அலையில் நாம் பல்முனைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த அலையில் தொற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது. இந்த கொரோனா தொற்றின் 2-வது அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என கண்கலங்கிய படி கூறினார். கொரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாரணாசியில் உள்ள பி.டி.ராஜன் மிஸ்ரா மருத்துவமனையில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் இம்மருத்துவமனைய சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

நகரத்திலும், கிராமங்களிலும் வீடு வீடாக மருந்துகளை விநியோகிக்க கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்கும் நடைமுறை பாராட்டத்தக்கது. கொரோனா தடுப்பூசி, மக்களுக்காக சேவை செய்யும் நமது முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது. வரும் நாட்களில், அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை விரிவுப்படுத்துவோம். கொரோனாவுக்கு எதிரான நமது தற்போதைய போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக தோன்றியுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இது நாம் பதட்டமில்லாமல் இருக்கும் தருணமல்ல. நாம் மிக நீண்ட அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Corona ,Modi , The 2nd wave of corona infection has robbed a lot of us: PM Modi shakes eye in consultation with doctors
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...